Post by Sumi on Dec 27, 2013 8:33:14 GMT 5.5
Part 1 of 2
'எண் நான்கு அறம்'என்று முன்னே சொன்ன முப்பத்திரண்டு மட்டுமில்லாமல் வேத சாஸ்திரங்களில் ஏராளமான தானங்களைச் சொல்லியிருக்கிறது.
ராஷ்ட்ரகூட ராஜ்யத்தில் முக்யமான ஸ்தானத்தில் இருந்த ஹேமாத்ரி என்றவர் இந்த தானங்களையெல்லாம் தொகுத்து ஒரு புஸ்தகம் எழுதியிருக்கிறார். ''தான ஹேமாத்ரி''என்றே அதற்குப் பெயர். எழுநூறு வருஷங்களுக்கு முன் எழுதிய இந்தப் புஸ்தகத்துக்கு ஆதாரம் அதற்கும் இருநூறு வருஷங்கள் முந்தி லக்ஷ்மீதரர் எழுதிய 'க்ருத்ய கல்பதரு'. இப்போது 'கனோஜ்'என்கிற கான்யகுப்ஜத்தில் வஸித்தவர் இந்த லக்ஷ்மீதரர். அதிலே சொல்லாத தானமே இல்லை. 'வித்யா தானம்' என்று படிப்புத் தருவது, அணைகள் கட்டி ஜனங்களுக்கு உபகாரம் பண்ணுவது முதலான ஸோஷல் ஸர்வீஸ் எல்லாவற்றையுமே அதில் தானம் பண்ணுவது என்று சொல்லியிருக்கிறது.
வேதத்திலும் தான மஹிமை எங்கு பார்த்தாலும் சொல்லியிருக்கிறது. வேத சிரஸான உபநிஷத்துக்களில் ரொம்பப் பெரிசானது 'ப்ருஹதாரண்யகம்'- அந்தப் பேருக்கு அர்த்தமே 'பெரிய காடு' என்பது. அப்படிக் காடாக விரிந்த அந்த உபநிஷத்தில் (5.2) ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) அப்படியே கொட்டிக் கிடப்பது மட்டுமில்லை;நடுநடுவே ரஸமான கதைகள் வரும். இந்தக் கதைகளின் மூலமும் ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி 'ப்ருஹதாரண்யக'த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது.
தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுஸான லீலை வேண்டியிருக்கிறது. நல்லது கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுரஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கச் செய்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டிருக்கிறார்.
ஒரு ஸமயம் தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், ''எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்''என்று ப்ரார்த்தித்துக் கொண்டார்கள்.
ப்ரம்மா,''த''என்ற ஒரே ஒரு அக்ஷரத்தை மட்டும் சொல்லிவிட்டு, ''இதுதான் உபதேசம். இதற்கு அர்த்தம் புரிந்து கொண்டீர்களா?''என்றார்.
நம்மிடத்திலே இருக்கிற தப்பு நமக்கே நன்றாகத் தெரியுமானதால் யாராவது ரொம்ப ஸ¨க்ஷ்மமாக, ஸ¨சனையாக எடுத்துக் காட்டினால்கூட உடனே புரிந்து கொண்டு விடுவோம்.
இந்த ரீதியில் தேவர்களுக்கு, ப்ரம்மா ''த''என்று சொன்னவுடனேயே அதற்கு இன்னதுதான் அர்த்தமாக இருக்கும் என்று புரிந்துவிட்டது. தேவர்களிடம் இருக்கிற பெரிய கோளாறு இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இல்லாததுதான். தேலோகம் ஆனந்த லோகமல்லவா?அங்கே ஸுகவாஸிகளாக மனம்போனபடி இருப்பது தேவர்களின் வழக்கம். ஆனபடியால், ''இந்த்ரியங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்''என்றுதான் ப்ரம்மா பண்ணுகிறார் (குறிப்பால் உணர்த்துகிறார்) என்று புரிந்து கொண்டார்கள்.
''புரிந்துவிட்டது. 'தாம்யத' என்று தாங்கள் உபதேசித்துவிட்டார்கள்''என்று பிரம்மாவிடம் சொன்னார்கள்
தமம், சமம் என்று இரண்டு உண்டு. இரண்டும் அடக்கத்தைக் குறிப்பது. புலனடக்கம், மனஸடக்கம் என்ற இரண்டைக் குறிப்பிட தமம், சமம் என்று ஒரே 'அடக்க'த்திற்கான இரண்டு வார்த்தைகளைச் சொல்வது. சமம் தமம் முதலான ஆறு குணங்களை ''சமாதி ஷட்க ஸம்பத்"என்று பெயரிட்டு ஸாதகர்களுக்கெல்லாம் நம் பகவத்பாதாள் விதித்திருக்கிறார். சமத்தோடு கூடிய நிலைதான் சாந்தி. தமத்தில் அடங்கியிருப்பது தாந்தி. ஒன்றை மட்டும் சொன்னால் அதுவே இரணடுவித அடக்கத்தையும் குறிக்கும்.
''தாம்யத'' என்றால் ''தமத்தைச் செய்யுங்கள். அதாவது இந்த்ரியங்களையும் மனஸையும் கட்டுப்பாடு (control) பண்ணிக் கொள்ளுங்கள்''என்று அர்த்தம்.
ப்ரும்மா ''த''என்று சொன்னது 'தாம்யத'வுக்கு abbreviation (சுருக்கம்) என்று தேவர்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள்.
ஒரு முழு வார்த்தையைச் சொல்வதைவிட அதில் முதல் எழுத்தை மட்டும் சொன்னால் அதற்கு ஜாஸ்தி சக்தி இருக்கிறது. சர்ச்சில்கூட '' V ஃபார் விக்டரி '' என்று சொல்லி, எங்கே பார்த்தாலும் அந்த 'வி'யை மந்த்ரம் மாதிரிப் பரப்பினார்.
''நீங்கள் அர்த்தம் பண்ணிக் கொண்டது ஸரிதான்''என்று சொல்லி ப்ரம்மா தேவர்களை அனுப்பினார்.
மநுஷ்யர்களுக்கும் இதேமாதிரி உபதேசம் வாங்கிக் கொள்கிற ஆசை வந்தது.
அவர்களும் பூர்வகாலத்தில் ப்ரம்மாவை நெருங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவரிடம் போய், ''உபதேசம் பண்ணுங்கள்''என்று வேண்டிக் கொண்டார்கள்.
மறுபடியும் ப்ரம்மா ''த''என்ற அதே சப்தத்தை மட்டும் சொன்னார்.
மநுஷ்யர்களுக்கும் தங்கள் குற்றம் உள்ளுக்குள் உறுத்திக் கொண்டிருந்ததால், தங்களுக்கு அத்யாவச்யமான உபதேசம் இன்னது என்று பளிச்சென்று புரிந்து கொண்டார்கள்.
''அர்த்தம் தெரிந்ததா?''என்று ப்ரம்மா கேட்டவுடன்,
''தெரிந்து கொண்டோம் - 'தத்த' என்று உபதேசம் பண்ணியிருக்கிறீர்கள்''என்றனர்.
''தத்த''என்றால் ''கொடு'', ''தானம் பண்ணு''என்று அர்த்தம். 'தத்தம் பண்ணுவது', தத்து கொடுப்பது'முதலான வார்த்தைகள் வழக்கத்தில்கூட இருக்கின்றனவே!
''ஆமாம், நீங்கள் ஸரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்''என்று ப்ரம்மா மநுஷ்ய ஜாதியிடம் சொல்லி அனுப்பி வைத்தார்.
தேவர்களும் மநுஷ்யர்களும் உபதேசம் வாங்கிக் கொண்டால் அஸுரர்கள் மட்டும் சும்மாயிருப்பார்களா? அவர்களும் ப்ரம்மாவிடம் வந்து உபதேசம் கேட்டார்கள். அவரும் பழையபடி அந்த 'க்ரிப்டிக்' (சுருக்கமான) ''த''உபதேசத்தை பண்ணினார். ''புரிந்ததா?''என்று கேட்டார்.
அஸுரர்களும் உடனே, ''புரிந்து விட்டது 'தயத்வம்'என்று உபதேசம் பண்ணிவிட்டீர்கள்''என்றனர்.
ப்ரம்மாவும், ''ஆமாம்''என்றார்.
'தயத்வம்' என்றால் 'தயையோடு இருங்கள்'என்று அர்த்தம்.
இரக்கமில்லாதவர்களைத்தானே அரக்கர் என்று சொல்லியிருக்கிறது?கொஞ்சம்கூட தயா தாக்ஷிண்யம் இல்லாத க்ரூர ஸ்வபாவம்தான் அஸுரர்களின் இயற்கை. அதனால் 'த'வுக்கு இப்படி அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள்.
இடி இடிக்கிறபோது ''ததத''என்கிற மாதிரி சப்தம் கேட்கும். ''தாம்யத - தத்த - தயத்வம்''என்பதுதான் அந்த மூன்று 'த'.
(to be continued...)