Post by kramans on Nov 18, 2012 21:59:45 GMT 5.5
உள்ளும் புறமும் - ஏன் நெற்றியில் தரிக்க வேண்டும் ?
எல்லோரும் அவரவருக்கு உரிய கார்ம அநுஷ்டானங்களைச் செய்ய வேண்டும். ஆசாரங்களை அநுசரிக்க வேண்டும். விபூதி, திருமண், ருத்ராக்ஷம் போன்ற சின்னங்களைச் தரிக்க வேண்டும் என்றெல்லாம் நான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். சிலர் இதெல்லாம் எதற்கு என்று நினைக்கிறார்கள். நல்ல சீலர்களுடன் இருக்க வேண்டியதே முக்கியம். சீலம் மனசைப் பொறுத்த விஷயம். சமய ஆசாரங்களெல்லாம் வெளி விஷயம்தானே?" என்று எண்ணுகிறார்கள்.
உண்மையில் வெளியில் செய்கிற காரியமும், வெளியில் அணிகிற சின்னங்களும்கூட உள்ளுக்கு நன்மை செய்கின்றன. உடலின் காரியமும் உள்ளத்தின் பாவமும் பரஸ்பரம் சம்பந்தமுடையவை. ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன். லாட்டரியில் தனக்கு லட்சம் ரூபாய் விழிந்திருக்கிறது என்று ஒருவர் சற்றும் எதிர்பாராமல் கேள்விப்படுகிறார். உடனே எல்லையில்லாத சந்தோஷம் உண்டாகிறது. இது ஒரு மனோபாவம்தான். ஆனால் இந்த மனோபாவம் காரணமாக அவரது உடம்பில் ஒரே பரபரப்பு உண்டாகிறது. மூச்சு அப்படியே சிறிது காலத்திற்கு அடக்கி மூர்ச்சையாகி விடுகிறார். குறிப்பிட்ட உணர்வு உண்டானால் இன்னவிதமான சுவாசம் மாறுகிறது என்ற நடைமுறை உண்மையைத் திருப்பிவைத்துக் குறிப்பிட்டபடி சுவாசப்பயிற்சி (பிராணாயாமாதிகள்) செய்தால், இன்ன விதமான உத்தமமான மனோபாவங்களை அடையலாம் என்று யோக சாஸ்திரம் விவரிக்கிறது. வெளித்தோற்றமே உள் உணர்வைச் சொல்கிறது. கோபம் வந்தால் கண் சிவக்கிறது. உதடு துடிக்கிறது. துக்கம் வந்கால் எதற்காகவோ கண்ணிலிருந்து ஜலம் ஜலமாகக் கொண்டுகிறது. சந்தோஷம் வந்தால் பல்லெல்லாம் தெரிகிறது. இப்படியெல்லாம் உடம்புக்கும் உணர்வுக்கும் சம்பந்தம் இருப்பதால்தான் இன்னபடி ஆசனம் போட்டால் இந்தந்த ஆத்ம குணங்களுக்கு அநுகூலமாகும் என்று மகான்கள் வழி கண்டிருக்கிறார்கள்.
மிலிடரிக்காரன் யூனிஃபாரம் போடாவிட்டால் அவனுக்கு வீரம் வராதா என்று கேட்பவர்கள் கேட்கலாம். ஆனால் மிலிடரிக்காரன் என்றால் லோகம் முழுக்க அவனுக்கென்று யூனிஃபாரம் இருக்கத்தான் இருக்கிறது. அதுவே வீரத்தைத் தூண்டுகிறது என்றும் சொல்கிறார்கள்.
வெளியில் தரிக்கும் சின்னம், வெளியில் செய்கிற சமஸ்காரம் இவை உள்ளுக்கும் நன்மை தருவனவே ஆகும். வெறும் வேஷம் என்று நினைத்தால் வேஷமாகவே போகும். ஆத்மார்த்தமாக, ஜீவனைப் பரிசுத்தம் செய்துகொள்வதற்காக இந்த சம்ஸ்காரத்தைச் செய்கிறேன். சின்னத்தை அணிகிறேன் என்று உணர்ந்து செய்தால் சத்தியமாகவே அது உள்ளே புகுந்து சுத்தி செய்கிறது. புறத்தில் செய்வது உள்ளுக்கு உதவுகிறது.
நான் சம்ஸ்காரங்களை முக்கியமாக சொல்வதோ ஆசாரங்களை விடாமலிருக்கப் பிரயத்தனம் செய்வதோ விபூதி, ருத்ராஷம் முதலிய சின்னங்களைத் தரிப்பதோ, பெரிதில்லை. நான் மடாதிபதி. ஆதலால் இதெல்லாம் என்னிடம் இருந்தால்தான் என்னிடம் வருவீர்கள். என் மடம் நடக்கப் பணம் கொடுப்பீர்கள். எனவே இவையெல்லாம் எனக்குக் காரியார்த்தமாக, வேண்டியிருக்கின்றன. ஆனால், உங்கள் விஷயம் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் அப்படியில்லை. உங்களுக்கு ஜீவனோபாயம் வேறு விதத்தில் கிடைத்து விடுகிறது. ஆதலால் என்னைவிட சிரேஷ்டமாக, முழுக்க முழுக்க ஆத்மார்த்தமாகவே நீங்கள் சமஸ்காரங்களைச் செய்து, சின்னங்களைத் தரித்துக் கொண்டு பரிசுத்தம் பெற முடியும். பெற வேண்டும்.
பரம சத்தியத்தை நினைவூட்டும் சின்னங்களைத் தரித்துக் கொள்வோம். கெட்ட வழியில் போகாமல் தடுக்கும் நல்ல கர்மாக்களை அநுஷ்டிப்போம். அதனால் சீலம் பெறுவோம். சித்த சுத்தி பெறுவோம். இந்தத் தெளிவின் பயனாக அனைத்துமான ஏக பரம்பொருளைத் தியானித்து, தியானித்து, அதை அநுபவத்தில் உணர்ந்து, ஆனந்தமாக இருப்போம்!