Post by kramans on Jan 23, 2012 23:46:16 GMT 5.5
தை பிறந்தால் வழி பிறக்கும்!
அயனம் என்றால் காலம், பாதை, பயணம் எனப் பொருள். சாஸ்திரத்தில் தட்சிணாயனம், உத்தராயனம் என காலத்தை இரண்டு வகையாக குறிப்பிட்டுள்ளனர். தை மாதத்தில் சூரியன் மகர ராசியில் உத்திராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் நுழையும்போது, உத்திராயன புண்ணிய காலம் துவங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வழக்கத்தில் உள்ள பழமொழியும், பொன்மொழியுமாகும். கிராமத்தில் இன்றளவும் தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும் தை பிறக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பார்கள். கல்யாணம் பேச தை வரட்டும். ஜாதகம் பார்க்கலாம் என்று சொல்வார்கள். கொடுக்க வேண்டிய காசுக்கும், வரவேண்டிய பணத்துக்கும் தை மாதத்தை எதிர்பார்ப்பார்கள். ஏனென்றால் தையில்தான் அறுவடை முடிந்து கையில் காசு, பணம் புரளும்.
சுப விசேஷங்களுக்கு தை மாதம் மிகவும் சிறந்தது. கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் என எல்லா சுபநிகழ்ச்சிகளுக்கும் இந்த மாதத்தில் குறைவிருக்காது.
நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டு முழுவதும் கொண்டாடினாலும் இந்த தை பொங்கலுக்கு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு காரணம் பஞ்ச பூதங்களையும், இயற்கையையும், உழைப்பையும், உழைப்பாளிகளையும் போற்றி வணங்குவதற்காக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உழவர் திருநாளாகவும், அறுவடை நாளாகவும் போற்றப்படுகிறது. பொங்கல் பண்டிகை ஒரு வாரம் முழுக்க கிராமங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. அன்றைய தினம் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கின்றனர்.
இதன் மறுநாள் பொங்கல் பண்டிகை. வீட்டில் பெரிய கோலம் வரைந்து புதுப்பானையில் புத்தரிசி இட்டு சர்க்கரை வெல்லம் சேர்த்து முந்திரி, திராட்சை எல்லாம் கலந்து பொங்கலிடுவார்கள். கரும்பு, மஞ்சள் கிழங்கு, காய்கறிகள், இளநீர், தென்னம்பாளை ஆகியவற்றை வைத்து பிரத்யட்ச தெய்வமான சூரியக் கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர். மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் எல்லா கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதத்தில் அன்று அதிகாலையிலேயே குளிப்பாட்டி, கொம்புகள், கால் குளம்புகளில் வண்ணம் பூசி, மஞ்சள் குங்குமம் வைத்து மாலை சூட்டி தூப தீபம் காட்டி வணங்குவார்கள். கடைசியாக காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தங்களது உற்றார், உறவினர், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று விருந்து, விழா என்று குதூகலமாக இருப்பார்கள்.
கிராமப்புறங்களில் போட்டிகள், வீர விளையாட்டுக்கள், கலை நிகழ்ச்சிகள், ஜல்லிக்கட்டு, கோழிச்சண்டை, ரேக்ளா ரேஸ் என்று பலவிதமான போட்டிகள்.. ஒவ்வொரு ஊரிலும் உற்சாகமாக நடைபெறும். வடமாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அங்கு பட்டம் பறக்க விடுவது மிகப் பெரிய திருவிழாவாக நடைபெறுகிறது. கடற்கரை, பொது மைதானங்களில் பொதுமக்கள் பெரும் திரளாக கூடி போட்டி போட்டுக் கொண்டு பட்டம் பறக்க விடுகின்றனர். ஆகவே இந்த இனிய தைப் பொங்கல் திருநாளில் இருள் நீங்கி ஒளி பிறக்கவும் எங்கும் பச்சையும், பசுமையுமாக இருக்கவும். சூரிய பகவானின் அருள் வேண்டி பிரார்த்திப்போமாக.
[glow=red,2,300] Sri Maha Periva Thiruvadi Charanam. [/glow]