Post by radha on Jan 2, 2022 6:20:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
'தியானத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது ஆரம்ப காலத்தில் ஆன்ம நாட்டம் கொண்டவர்களுக்கு தான் தேவை. பழகப் பழக, நாளாவட்டத்தில் தியானம் செய்வது அவனது காரியத்தோடு கலந்துவிடும். சமூகத்தில் இருந்து கொண்டு தனது கர்மாவைச் செய்பவனின் மனது தனிமையில் தான் இயங்கும்''
"அப்போது யோகிகள் வழியில் நீங்கள் அதை கற்றுத் தருவதில்லையா?
"மாடு மேய்ப்பவன் கையில் கம்புடன் அதை வழி நடத்துபவது போல் தான் யோகி மனதை செலுத்துகிறான். வழியில் கை நிறைய புல்லை வைத்துக் காட்டிக்கொண்டே மாட்டை செலுத்துவதில்லையா?''
''அது எப்படி ஐயா சாத்தியம்?''
"அதற்கு தான் அடிக்கடி '' நான் யார் ?'' என்று வினவுவது. இந்த வினாவுக்கான விடை தான் ஆத்மாவை காட்டும். அந்த பெரிய சோதனையில் ஜெயித்தவனுக்கு மற்ற சோதனைகள் தூசியாக மறையும் . "
பால் ப்ரண்டன் மகரிஷி சொன்னதை உள் வாங்கிக்கொண்டு மெளனமாக இருந்தார்.
பகவான் ரமண மகரிஷி மேலே தொடர்ந்தார்:
''இப்படி சொன்னால் விளங்குமா பார்? எல்லோருக்கும் துக்கமே இல்லாத சுகம் வேண்டும். முடிவில்லாத சுகம் தேவை. இந்த எண்ணம் ஞாயம். ஆனால் தன்னை(இந்த உடலை) விரும்பு கிறவர்கள் தானே அதிகம்.''
"ஆமாம் ஐயா "
"இப்போது யோசி. மனிதன் தன்னை, அதாவது தனது உடலை, அதன் பெயரை அதிகம் விரும்பு பவன், சுகத்தை அடைய குடி, ருசியான உணவு, கேளிக்கை, மதம், இவற்றை பயன்படுத்துகிறான். அது தான் அவன் சுய ரூபம் என்று நினைப்பவன். ஆனால் இந்த இன்பம் வேறு, ஆத்மானந்தம் வேறு. அவன் இயற்கை ஸ்வரூபம் வேறு''
''ஐயா நீங்கள் சொல்வது.......''
"மனிதன் இயற்கையாகவே ஆனந்தத்தின் ஸ்வரூபம். அதை உணர்ந்தால் தான் அனுபவிக்க இயலும். ஆத்ம சுகானுபவம் தேடுவது அவன் தனக்குள் புதைந்து கிடைக்கும் புதையலைத் தேடுவது. அது என்றும் நிலையானது. அழிவற்றது. அதை அடைந்தவன் ஆனந்தன். என்றும் சுகவாசி.''
"உலகம் என்பது துன்பம் நிறைந்ததா ?
"ஆமாம் என்று தானே நீங்கள் சொன்னதிலிருந்து விளங்குகிறது. உண்மையை அறியாமை
துன்பத்தை தான் தரும். தெரிந்தோ தெரியாமலோ அநேகமாக எல்லோரும் இந்த பொய்யான இன்பத்தை, சுகத்தை தேடுபவர்களாகத் தான் உலகமுழுதும் இருக்கிறார்கள்.''
மகரிஷி மௌனமாகிவிட்டார். ஹாலில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக அவரை வணங்கிவிட்டு சென்றார்கள். அவரது ஆழ்ந்த கூரிய பார்வையிலிருந்து தனது கண்களை விலக்கிக் கொண்டு பால் ப்ரண்டன் மகரிஷியை வணங்கிவிட்டு செல்கிறார்.
ரெண்டு வாரங்களில் பம்பாயிலிருந்து ஐரோப்பா செல்வதற்கு வாங்கிய பயணச்சீட்டை ரத்து செய்துவிட்டு பால் ப்ரண்டன் திருவண்ணாமலையிலேயே அடைக்கலம் ஆகிவிட்டார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM