Post by kgopalan90 on Mar 25, 2021 13:29:39 GMT 5.5
2007 ம் ஆண்டு ஸ்ரீ. உ.வே. Deevalur N.V.S. ஸ்வாமி பிராமண சங்கத்தில் ஆற்றிய உரையின் தொகுப்பினை எல்லோருடைய பயனுக்காகவும் இங்கே தொகுத்து அளித்துள்ளேன்.
பஞ்சாங்கம் என்றால் என்ன?
முக்கியமான பஞ்ச அங்கங்கள் பற்றி தெரிவிக்கும் நூல் என்பதால் பஞ்சாங்கம் என்று பெயர். பஞ்ச அங்கங்களாவன திதி, வாரம் (கிழமை), நக்ஷத்ரம், லக்னம், யோகம் அல்லது கரணம்.
ராசி மண்டல அமைப்பு:
மொத்தம் 12 ராசிகள் உள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பதாக.
பூமி உருண்டையானது. அதை அட்சரேகை தீர்க்க ரேகை என்ற குறுக்கு மற்றும் நெடுக்குக் (கற்பனைக்) கோடுகளால் பிரிப்பது பற்றி அறிவோம்.
மொத்தம் 360 டிகிரி கொண்ட இந்த பூமியை 12 குறுக்கு கோடுகளால் சமபாகங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு பகுதிக்கும் 30 டிகிரி வரும்.
ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்பது இதனால் ஏற்படுகிறது.
இந்த ராசிகளை வைத்து மாதம் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.
மாதம் எப்படி உருவாகிறது?
சூரியனின் கிரணங்கள் பூமியில் விழுகிறது.
சூரியன் ஒரே இடத்தில் இருக்கிறது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. ஒரு முறை சுற்றிக்கொள்ள 24 மணி நேரம் ஆகிறது.
அப்படிச் சுற்றி முடிக்கையில் அதிகாலையில் சூரியனுடைய முதல் கிரணம் எங்கே விழுகிறதோ அன்றைய முதல் ராசி அது என்று கொள்ளவேண்டும்.
உதாரணமாக நாம் பன்னிரண்டாகப் பிரித்து வைத்திருக்கும் மேஷராசிக்குரிய சித்திரை மாதத்தில் முதல் பாகையின் (பாகை – டிகிரி)
முதல் அம்சத்தில் சூரியனுடைய கிரணம் விழுந்தால் அது சித்திரை மாதம் முதல் தேதி. ஆக சித்திரை மாதம் இப்படித் துவங்குகிறது.
இந்த பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றி வர 365 நாட்களாகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
மொத்தம் 360 நாளில் 360 டிகிரியைக் கடந்துவிடுகிறது. ஆக ஒரு நாளைக்கு ஒரு டிகிரி கடக்கிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றால் பன்னிரண்டு ராசிக்கு தலா ரெண்டு மணிநேரம் என்பது சராசரிக் கணக்கு.
ஆனால் துல்லியமாகச் சொன்னால் சில ராசிகளுக்கு சற்றுக் குறைவாகவும் சில ராசிகளுக்கு சற்று அதிகமாகவும் பஞ்சாங்கத்தின் மூலம் அறியலாம். துல்லியக் கணக்கு கீழே....
மேஷம் 1.49
ரிஷபம் 2. 02
மிதுனம் 2.11
கடகம் 2.08
சிம்மம் 2.01
கன்னி 1.59
துலாம் 2.04
விருச்சிகம் 2.10
தனுசு 2.08
மகரம் 1.55
கும்பம் 1.43
மீனம் 1.49
மேஷராசியின் முதல் பாகையை முதல் நாள் சூரியன் கடக்கிறது என்று பார்த்தோம். ஒரு டிகிரி என்பது நான்கு நிமிடம் என்பதால்
இதுபோல 30 டிகிரியைக் கடக்க 30 x 4 = 120 நிமிடங்கள் எடுத்துக்கொண்டு ஒரு ராசியைக் கடக்கிறது. காலையில்
ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு, ரெண்டு மணி நேரம் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக்கொள்கிறது என்று தோராயமாகச் சொல்லலாம்.
ஆனால் முதல் நாள் ஒரு பாகையைக் கடந்துவிடுவதால் அடுத்தநாள் நாலு நிமிடம் குறைவாக எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதுபோல மாதம் முழுக்க ஒவ்வொரு பாகையாகக் கடந்து சித்திரை மாதம் கடைசி நாள் ஒன்றுமே இல்லாமல் போகிறது. இப்படி அடுத்த மாதம் பிறக்கிறது.
மாதம் உருவாவது எப்படி என்று தெரிந்து கொண்டதிலேயே ராசி இருப்பு என்ற பதத்தின் பொருளும் விளங்கும். கடக்க வேண்டிய மீதி ராசியே ராசி இருப்பு என்று சொல்கிறோம்.
உதாரணமாக இன்று ஆடி மாதம் பத்து தேதி என்று கொண்டால் கடகராசியில் (10x4=40) 40 நிமிடங்கள் போக மீதி 80 நிமிடங்கள் ராசி இருப்பு என்று சொல்லலாம்.
நமது பரந்தாமன் பஞ்சாங்கத்தில் மட்டும் நாழிகை கணக்கில் இல்லாமல் மணியிலேயே ராசி இருப்பு போடப்பட்டிருக்கிறது.
ஸ்தான சுத்தம் என்றால் என்ன?
முஹூர்த்தத்திற்காக நாம் ‘லக்னம்’ என்று பார்க்கிறோம்.
லக்னம் என்றால் என்ன?
ஒவ்வொரு நாளும் 12 ராசிகள் வருகின்றன என்று பார்த்தோம். நாம் முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் எனப்படும்.
மற்றபடி ராசிக்கும் லக்னத்துக்கும் எந்த வித்யாசமும் கிடையாது. முஹூர்த்தத்துக்காக எந்த ராசியைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அதுவே லக்னம் ஆகும்.
சில முஹூர்த்தங்களுக்காக எந்த ஸ்தானம் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறதோ லக்னத்திலிருந்து அந்த
இடம் வரை எண்ணி அதில் ராகு, கேது, சனி, சுக்கிரன் என்று எந்த க்ரஹமும் இல்லாமல் இருப்பதே ஸ்தான சுத்தம் ஆகும்.
கிரகங்களின் இடமாற்றம்:
அடுத்து கிரகங்களின் இடமாற்றம் பற்றித் தெரிந்து கொள்வோம்.
பூமியைப் போலவே 9 கிரகங்கள் உண்டு என்று நாம் அறிவோம்.
பூமி சூரியனைச் சுற்றுவது போலவே அவைகளும் அவைகளுக்குரிய பாதையில், அவைகளுக்குரிய வேகத்தில் சுற்றி
வருகின்றன. சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பதையும் நாம் அறிவோம்.
இந்த நிலையை பஞ்சாங்கத்தில் அந்தந்த மாதத்தின் பக்கத்திலேயே கட்டத்தில் போட்டிருப்பார்கள்.
மாத ஆரம்ப நாள் அன்று எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்று போட்டிருப்பார்கள்.
சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் சீக்கிரமாக ராசி மாறாது.
ஆனால் சுக்ரன், புதன், செவ்வாய் போன்ற கிரகங்கள் வேகமாக மாறும். சில சமயம் மாதம் ரெண்டு முறை கூட மாறும்.
அந்த மாற்றத்தை எந்த தேதியில் எந்த ராசிக்கு மாறுகிறது என்று கட்டத்தின் நடுவிலேயே கொடுத்திருப்பார்கள்.
இப்படி கிரகங்களின் இடமாற்றம் பற்றிக் குறிப்பிட்டவர்கள் சந்திரனின் இட மாற்றத்தைப்பற்றி மட்டும் எங்கும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.
காரணம் சந்திரனின் இடமாற்றம் என்பது அபரிமிதமானது. இரண்டரை நாளுக்கு ஒருமுறையாக ராசி மாறிவிடுவார் அவர்.
அவரின் இட மாற்றத்தை கணிப்பது கடினம் என்பதாலேயே பஞ்சாங்கத்தில் குறிப்பிடுவதில்லை.
ஆனால் அவர் இருக்குமிடத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்..
நட்சத்திரங்கள் பற்றிய அறிவு:
சந்திரனுக்கும் நட்சத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் கணவன் மனைவிக்குள்ள தொடர்புதான்.
சந்திரனுக்கு 27 நட்சத்திரங்களை மணமுடித்து வைத்திருக்கிறார்கள் என்று கதை உண்டு.
அதனால் அன்றைய நாள் என்ன நட்சத்திரமோ அதுவே சந்திரன் இருக்கும் இடம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இனி நட்சத்திரம் பற்றிப் பார்ப்போம்.
ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரி என்று பார்த்தோம். அந்த 30 டிகிரியை ஒன்பது பாதங்களாகப் பிரித்துவிடவேண்டும்.
அப்படிப்பிரிக்கப்பட்ட ஒன்பதில் ஒரு பாதத்துக்கு (1/9) நவாம்சம் என்று பெயர்.
அதாவது அஸ்வினி என்று எடுத்துக்கொண்டால் 1 2 3 4 பாதங்கள் உண்டு. பரணிக்கும் அப்படியே 1 2 3 4 பாதங்கள் உண்டு.
அடுத்து கிருத்திகைக்கும் அப்படியே உண்டு. அதில் முதல் பாதம் மட்டும் எடுத்துக்கொண்டு மேஷ ராசிக்கு அஸ்வினி 4 பாதங்கள், பரணி 4 பாதங்கள், கிருத்திகை ஒரு பாதம் மொத்தம் 9 பாதங்கள்,
அதாவது ரெண்டேகால் நட்சத்திரம் மேஷராசிக்கு என்று கொள்ளவேண்டும்.
கிருத்திகை 2 3 4 பாதங்கள், ரோகிணி 1 2 3 4 பாதங்கள், மிருகசிரீஷம் 1 2 பாதங்கள் ஆக 9 பாதங்கள், ரெண்டேகால் நட்சத்திரம் ரிஷப ராசிக்கு.
கீழே அட்டவணையில் உள்ளது போல பார்த்துக்கொள்ளவும்.
அஸ்வினி1,2,3,4
பரணி1,2,3,4
கார்த்திகை -1 – மேஷம்
கார்த்திகை-2,3,4
ரோகிணி-1,2,3,4
ம்ருகசீரீஷம்-1,2 – ரிஷபம்
ம்ருகசீரீஷம்-3,4
திருவாதிரை 1,2,3,4
புனர்பூசம் -1,2,3 – மிதுனம்
புனர்பூசம் -4
பூசம்-1,2,3,4
ஆயில்யம்-1,2,3,4 – கடகம்
மகம்-1,2,3,4
பூரம்-1,2,3,4
உத்திரம்-1 – சிம்மம்
உத்திரம்-2,3,4
ஹஸ்தம் -1,2,3,4
சித்திரை-1,2 - கன்னி
சித்திரை -3,4
ஸ்வாதி - 1, 2,3,4
விசாகம் -1,2,3 - துலாம்
விசாகம் - 4
அநுஷம் - 1,2,3,4
கேட்டை-1,2,3,4 - விருச்சிகம்
மூலம்-1,2,3,4
பூராடம் -1,2,3,4
உத்ராடம் – 1 – தனுசு
உத்ராடம் - 2,3,4
திருவோணம்-1,2,3,4
அவிட்டம்-1,2 - மகரம்
அவிட்டம்-3,4
சதயம் -1,2,3,4
பூரட்டாதி - 1,2,3 - கும்பம்
பூரட்டாதி -4
உத்ரட்டாதி -1,2,3,4
ரேவதி-1,2,3,4 – மீனம்
இப்படி ரெண்டேகால் நட்சத்திரங்களாக ஒவ்வொரு ராசிக்கும் போட்டால் மொத்தம் 108 அம்சங்கள். அதாவது 9 x 12 = 108, அல்லது 27 x 4 = 108 நவாம்சங்கள் என்பதுவரை தெளிவு.
சில நட்சத்திரங்கள் (அஸ்வினி, பரணி போன்றவை) கட்டாயம் மேஷராசியில்தான் வரும்.
கிருத்திகை என்றால் முதல் பாதம் மட்டும் மேஷத்திலும் மீதி மூன்று பாதங்களானால் ரிஷபத்திலும் வரும்.
ஆகையால் ஒருவரது நட்சத்திரமும் அதன் பாதமும் தெரிந்துவிட்டால் அவரது ராசியைக் கண்டுபிடித்துவிடலாம்.
பஞ்சாங்கத்தில் அன்றைய நட்சத்திரமும் போட்டிருக்கும் என்பதால் அதை அறிவதும் சுலபம். பாம்பு பஞ்சாங்கம் என்றால்
கடைசியில் சந்திரன் எந்த ராசியில் இருப்பார் என்றும் போட்டிருப்பார்கள்.
இனி சுபகாரியங்களுக்கு விலக்கவேண்டிய கிழமைகள், நட்சத்திரங்கள், திதிகள், என்னென்ன என்று பார்க்கலாம்.
- - - Updated - - -
விலக்க வேண்டிய, திதி, வார, நட்சத்திரங்கள்:
செவ்வாய் சனி குருட்டு நாட்கள் எனப்படும். இவைகளில் செய்யப்படும் சுபகாரியங்கள் விருத்தியடையாது என்கிறது ஜோதிஷ சாஸ்திரம்.
ஞாயிறு, திங்கள் ஒரு கண் உள்ளவை. ஆகவே பாதி வெற்றி என்று கொள்ளலாம்.
புதன், வியாழன், வெள்ளி ஆகியவை இரு கண் உள்ள நாட்கள். அவை உத்தமம் ஆகும்.
இவற்றில் செய்யப்படும் சுப காரியங்கள் நன்றாக விளங்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.
விலக்க வேண்டிய திதிகள் என்றால் பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்தசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி. இவைகளில் எந்த சுப காரியங்களும் செய்யக்கூடாது.
மீதியுள்ள திதிகளிலே மத்யமமான திதிகளும் உள்ளன, உத்தமமான திதிகளும் உள்ளன.
அடுத்து ஆகாத நட்சத்திரங்கள் என்று சொன்னால் கீழே உள்ள அட்டவணைப் படி அறிந்துகொள்ளலாம்.
நல்ல நட்சத்திரம்
அஸ்வினி
ரோகிணி
மிருகசிரீஷம்
புனர்பூசம்
பூசம்
மகம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
அனுஷம்
உத்திராடம்
திருவோணம்
உத்திரட்டாதி
கூடாத நட்சத்திரம்
பரணி
கிருத்திகை
ஆயில்யம்
பூரம்
கேட்டை
பூராடம்
பூரட்டாதி
சுமாரானவை
திருவாதிரை
விசாகம்
மூலம்
அவிட்டம்
சதயம்
ரேவதி
யோகங்கள்:
அடுத்து நாம் அறிய வேண்டியது சித்த அமிர்தாதி யோகங்கள். அவை மூன்று வகைப்படும். சித்த, அமிர்த, மரணயோகங்கள்.
இன்னின்ன கிழமையும் இன்னின்ன திதியும் சேர்ந்தால் இன்னின்ன யோகம் என்கிறது சாஸ்திரம்.
அதை பஞ்சாங்கத்தில் சி, அ, ம என்று முதலெழுத்தைப் போட்டு குறிப்பிட்டிருப்பார்கள். இதைப் பஞ்சாங்கத்தில் அட்டவணையாகவே கொடுத்திருப்பார்கள்.
அமிர்த யோகத்தைவிட சித்தயோகம் நல்லது.
இதுதவிர அன்றன்றைய தேதியிலும் யோகம் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். இந்த அட்டவணை ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் இருக்கும்.
இதுவரை நல்லநாள் பார்க்கத் தேவையான விஷயங்களை தெரிந்துகொண்டோம். இனி பஞ்சகம் என்றால் என்ன என்று பார்க்கலாம்.
பஞ்சகம் என்றால் என்ன?
நல்ல காரியத்துக்கு லக்னம் குறிக்கும்போது முக்கியமாகப் பஞ்சகம் பார்த்துக் குறிக்க வேண்டும்.
திதி, கிழமை, நட்சத்திரம், லக்னம் ஆகிய நான்கு விஷயங்களைக் கூட்டி ஒன்பதால் வகுத்து வரும் மீதியை வைத்து உத்தமான நாள், மத்திமமான நாள், அதமமான நாள் என்று அறிவது பஞ்சகம். இது மிக முக்கியம்.
இதை எப்படி வைப்பது என்றால் பிரதமை, த்விதீயை என்று ஆரம்பித்து அந்த வரிசையை 1, 2 என்று எண்ணாகக் கொள்ளவேண்டும்.
கிழமை என்றால் ஞாயிறு முதலும், நட்சத்திரங்களில் அஸ்வினி முதலும், லக்னங்களில் மேஷம் முதலும் என்று
கொள்ளவேண்டும். இப்படி நாம் குறித்த நாளுக்குரிய திதி, வார, நட்சத்திர, லக்ன எண்களைக் கூட்டி 9ஆல் வகுத்தால் வரும் மீதியைக் கொண்டு பஞ்சகத்தை அறியலாம். இது மிக மிக முக்கியம்.
உதாரணமாக எல்லாம் கூட்டி 39 என்று வந்தால் அதை 9 ஆல் வகுக்க மீதி 3 என்று வரும். அது உத்தம பஞ்சகம் ஆகும்.
3, 5, 7, 9 என்று மீதி வந்தால் அவை உத்தமம் என்று அறியலாம்.
1, 2, 4, 6 மற்றும் 8 என்று வந்தால் அவை முறையே மிருத்யு பஞ்சகம், அக்னிபஞ்சகம், ராஜபஞ்சகம், சோர பஞ்சகம், ரோக பஞ்சகம் என்று அறியலாம். இவை அதமங்களாகும்.
அதாவது விலக்கவேண்டியவைகள்.
இன்னும் சிலர் துருவங்களையும் கூட்டி பஞ்சகம் அறிவர்.
துருவம் என்றால் மீனம், மேஷம் என்று சந்திக்கக்கூடிய துருவங்களைக் கூட்டியும் பஞ்சகத்தை தீர்மானிப்பார்கள். அதுவும் அட்வான்ஸ் லெவெலில் பார்க்கலாம்.
ஏன் 9 ஆல் வகுப்பது என்பதும் அடுத்த லெவெலில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயம். இங்கே 9 ஆல் வகுக்கனும் என்று தெரிந்துகொள்வோம்.
அதே போல பஞ்சகம் எப்படியுள்ளது என்பதையும் பஞ்சாங்கம் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
அடுத்து தினப்பொருத்தம் பற்றியும் அதை எப்படிப் பார்ப்பது என்றும் பார்க்கலாம்.
தினப்பொருத்தம் :
தினப்பொருத்தம் பார்க்கவேண்டியது முக்கியம். அதை ஆணுக்கு பார்க்கணுமா இல்லை பெண்ணுக்கா?
என்றால் ஒரு சிம்பிள் லாஜிக் உண்டு. எங்கெல்லாம் பொம்மனாட்டிகள் சம்பந்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் பெண்களுக்குதான் தினப்பொருத்தம் பார்க்கணும்.
விவாஹம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற காரியங்களில் பெண்ணுக்குத்தான் தினப் பொருத்தம் அவசியம்.
உபநயனம் என்றால் ஆண்களுக்குத்தான் பார்க்கணும்.
அதேபோல சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் எல்லாம் ஆண்களுத்தான் பண்ணுவது (கூட பெண்கள் இருந்தாலும்) என்பதால் அவர்களுக்கு பார்க்கவேண்டியதுதான் முக்கியம்.
தினப்பொருத்தம் எப்படிப் பார்ப்பது?
யாருக்கு தினப்பொருத்தம் பார்க்கிறோமோ, அவர்களின் நட்சத்திரத்திலிருந்து நாம் பார்த்துவைத்திருக்கும் நாளின் நட்சத்திரம் வரை எண்ணி,
அதை 9 ஆல் வகுத்தால் என்ன மீதி வருகிறதோ அதை வைத்து தினப்பொருத்தம் உண்டா இல்லையா என்று தெரிந்துகொள்ளலாம்.
இது 2, 4, 6, 8, 9 என்று வந்தால் உத்தமம். தாராளமாக லக்னம் வைக்கலாம். அடுத்து நாம் அறியவேண்டியது சந்திராஷ்டமம் என்றால் என்ன என்பது.
இந்த வார்த்தையில் சந்திரன், அஷ்டமம் என்று ரெண்டு பதங்கள் உள்ளன. நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாம் ராசியில் சந்திரன் இருக்கும் நாட்கள் எல்லாம் சந்திராஷ்டமம் எனப்படும்.
இந்த நாட்களில் (சிக்கல்கள், மனத்தாங்கல்கள் போன்ற) விபரீதமாகப் பலன்கள் இருக்கும் என்பதால் அதை விலக்குவது.
விவாஹத்துக்கு லக்னம் வைக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் சந்திராஷ்டமம் இல்லாத நாட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதை எப்படிக் கண்டறிவது என்றால் அவரவர் நட்சத்திரத்திலிருந்து 17ம் நட்சத்திரம் என்றைக்கோ அன்றைக்கே சந்திராஷ்டமம் என்று கீழே உள்ள அட்டவணையைப் பார்த்து அறியலாம்.
அடுத்து சூரிய உதயத்தின் பயன் என்ன என்று பார்க்கலாம். மேலும் சந்திராஷ்டமம் பற்றி அறியஇங்கே செல்க..
சூர்யோதயம் எதற்காகத் தெரிந்துகொள்வது?
பஞ்சாங்கங்களில் ஒவ்வொரு தேதியிலும் இன்ன நட்சத்திரம் இவ்வளவு நாழி இருக்கும், இன்ன திதி இவ்வளவு நாழி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.