|
Post by saidevo on Feb 28, 2016 10:55:32 GMT 5.5
திருக்கஞ்சனூர்(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)(சம்பந்தர் தேவாரம்: 2.47.1: மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்) குறிப்பு பாடலின் ஈற்றயலடி வரும் பாடலின் முதற்சீரோடு அந்தாதித்தொடை அமைய மண்டலித்து வரும். இறுதியாய் நிற்கும் பதினொன்றாம் பாடல் ’அழற்கண்ணன் போற்றுவமே’ என்று முடிவுறும். கோவில் temple.dinamalar.com/New.php?id=907www.shivatemples.com/nofct/nct36.phpதேவாரப் பதிகம் அப்பர்: 6.90: மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=6&Song_idField=60900காப்பு கஞ்சனூர் வாழும் கணபதியே உன்பாதம் தஞ்சமெனக் கொண்டேன் தடைநீங்க - செஞ்சடையன் கஞ்சனூர் ஆளும்கோன் கற்பகம்பேர் நானெழுதக் குஞ்சரக்கை நுண்மை கொடு. பதிகம் (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)அழற்கண்ணன் மணமகனாம் ஆடற்கோ தாண்டவனாம் கழற்செல்வன் பாதவிணை கஞ்சனூரில் தரிசித்தே விழுநாளில் வினைநீங்க வெள்விடையான் அருள்வேண்டி மழுவாளி மாதேவ மாமணியைப் போற்றுவமே. ... 1 மாமணியைச் சபாமணியை உமாமணியைத் தூமணியைக் காமணியை அன்னையுடன் கஞ்சனூரில் தரிசித்தே தாமணியும் தோலணிந்து தாரணிந்த கோலத்தைத் தூமணிவெண் ணீற்றாலே துதிபாடிப் போற்றுவமே. ... 2 [காமணி = காக்கும் மணி; தூமணி = முத்து] துதிபாடிப் போற்றிவுயிர்த் தொன்மையினை அறிவோமே பதம்காட்டிக் கஞ்சனூரில் பராசரர்க்கு முத்திதந்தே வதுவைக்கோ லங்காட்டி மலரோனுக் கருள்செய்தே முதன்மைக்கோ வெனநிற்கும் முக்கணனைப் போற்றுவமே. ... 3 [உயிர்த்தொன்மை = பரமனின் துளியான நம் சீவான்மா இந்த உலகினும் தொன்மையானது என்னும் உண்மை] *****
|
|
|
Post by saidevo on Mar 15, 2016 20:10:26 GMT 5.5
முக்கணனை மூலவனை முளைமதியம் சூடுவனை சுக்கிரர்க்கு மந்திரத்தைச் சொன்னவனைக் கஞ்சனூரில் எக்கணமும் எண்ணத்தில் ஏற்றுவோரின் இன்னல்கள் நிக்கிரகம் செய்வோனை நீறணிந்து போற்றுவமே. ... 4
நீறணிந்து பாதத்தில் நெடுஞ்சாணாய் வீழ்ந்தேநாம் காறணிந்த வாழ்நாளில் கஞ்சனூரில் வழிபட்டே கூறுசெய்து சுரைக்காயக் கொளச்செய்த கொக்கிறகன் ஆறணிந்து கானகத்தில் ஆடுவனாம் போற்றுவமே. ... 5
[காறு = கால அளவு]
ஆடுவனாம் அரதத்தர்க் கருளியனாம் கல்நந்தி மாடதனைப் புல்தின்ன வைத்தவனாம் கஞ்சனூரில் ஓடிமாயும் வாழ்விதனின் உட்பொருளைக் காட்டுவனாம் நாடிநாமும் மருள்நீக்கி நன்மைதரப் போற்றுவமே. ... 6
நன்மைதர வேண்டிடவே நவகோளும் கணபதியும் குன்றெறிந்தோன் சீதேவி குழகனருள் பெற்றடியார் சன்னிதிகள் நின்றருளும் தலமிதுவாம் கஞ்சனூரில் அன்னையுடன் ஆட்செயும் அத்தனைநாம் போற்றுவமே. ... 7
அத்தனைநாம் போற்றுகையில் அவன்லீலை பலவற்றுள் பித்தனிவன் வாழ்மலையைப் பேர்த்தெடுக்க முயன்றவனைக் கத்தவைத்து அருள்செய்த கஞ்சனூரின் ஈசனைநம் அத்தனென்று கொண்டவனின் அடிமுடியைப் போற்றுவமே. ... 8
அடிமுடியைக் காணாதே அயனரியை அலையவைத்தே நெடுவானைத் தொடுதூணாய் நீண்டவழல் உருக்கொண்டு படியவைத்தே ஆட்கொண்ட பரமனவன் கஞ்சனூரில் விடிபொழுதில் ஒலிக்கின்ற வேதத்தைப் போற்றுவமே. ... 9
வேதத்தைத் தள்ளுகின்ற வேற்றுநெறி கொள்ளுவோரின் வாதத்தின் பொய்யுணர்ந்து மனந்தன்னில் கஞ்சனூரன் பாதத்தை நாடுவோர்க்குப் பரமனவன் அருள்செய்யும் போதத்தை உளங்கொண்டு பொய்யகலப் போற்றுவமே. ... 10
பொய்யகலப் போற்றிடவே பூரணனின் அருள்சூழ்ந்தே உய்வித்த அப்பரவர் ஓர்பதிகம் கஞ்சனூரில் மெய்யுருகப் பாடியது மேவிநிற்க நம்முளத்தில் ஐயங்கள் அகற்றியருள் அழற்கண்ணன் போற்றுவமே. ... 11
--ரமணி, 08-09/02/2016, கலி.26/10/5116
*****
|
|
|
Post by kahanam on Apr 8, 2016 9:39:49 GMT 5.5
Divine! Om Nama Shivaaya! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!
|
|